அறிமுகம்-Introduction

மாசிலாமணி விருது...2013


சொந்த மண்ணிலிருந்து வெகு தொலைவில் குடிபெயர்ந்திருந்தாலும், தாய் நாட்டின் வாசனையை ஹாங்காங் தமிழர்கள் மறக்கவில்லை

தமிழ்ப் பண்பாட்டை தமிழர்களிடையே நிலைத்திருக்கவும், தமிழர்களை வேறுபாடின்றி ஒருங்கிணைக்கவும் ஒரு அமைப்பு தேவை என உணர்ந்தணர். இந்த உணர்வு செயலாக்கம் பெற்றது 1967-ல். தொழிலதிபர் பி.எஸ். அப்துல் ரகுமானின் அயராத முயற்சியில் தமிழ்ப் பண்பாட்டுக் கழகம் உருவாகி 13.10.1967 அன்று பதிவு செய்யப்பட்டது. தற்பொழுது ஹாங்காங் வாழ் தமிழர்களால் அன்புடன் தமிழ்த்தாத்தா என அழைக்கப்படும் முகமது யூனுஸ் ஐயா தலைவராகவும், ஹமீது ஜலால் செயலாளராகவும், அப்துல் சுக்கூர் பொருளாளராகவும் அப்போது நியமிக்கப்பட்டனர். முதல் பொதுக்குழுக் கூட்டம் 1968-ல் கூடியது.

தமிழ்ப் பண்பாட்டுக் கழகம் கடந்து வந்த பாதை வரலாற்று சிறப்புமிக்கது.

துவக்க காலங்களில் திரைப்படங்களை வருவித்து திரையிடுவது மட்டுமே கழகத்தின் பணியாக இருந்து வந்தது. பின்னர் படிப்படியாக பிரபலமான பிரமுகர்களைக் கௌரவிப்பதும், கலை மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் நடத்துவதும், விளையாட்டுப் போட்டிகள், மேடை நாடகங்கள், குறும்படங்கள், சிறுவர் விழா என விரிவடைந்து, தற்சமயம் மகளிருக்கான பிரத்யேக நிகழ்ச்சிகள் என்பது வரை விரிவடைந்துள்ளது.

இன்று கழகத்தில் தமிழர்களல்லாது பிற மாநிலத்தவரும் உறுப்பினர்களாக இருப்பது குறிப்பிடத்தக்கதாகும். இன மொழி உணர்வு பேதமின்றி,  உறவும் ஒற்றுமையும் வளரவும், மொழி ஆர்வம் தழைக்கவும், நம் கலாச்சாரத்தைப்  போற்றவும் துவக்கப்பட்ட கழகம் அதன் நோக்கங்களையும் தாண்டி இன்று சுனாமியால் பாதிக்கப்பட்ட தாயக மக்களுக்கும், உள்ளூரில் (சிச்சுவான்,சீனா) இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் நிதியுதவி வழங்குவது வரை தன் பொறுப்பை விரிவுபடுத்தியுள்ளது

கழகத்தின் நெடிய வரலாற்றில், கழகம் துவங்கிய ஆண்டில், அப்போதைய தமிழக முதல்வர் அறிஞர் அண்ணாவிற்கு வரவேற்பு அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. கழகம் வரவேற்பு நல்கிய வகையில் நாவலர். இரா. நெடுஞ்செழியன் 1970, அப்துல் சமது 1976, குமரி அனந்தன் 1985, லேனா தமிழ்வாணன் 1988, சாவி 1988, நீதிபதி மு.மு. இஸ்மாயில் 1970, கி.வேங்கடசுப்பிரமணியன் 1980, டாக்டர். எம்.எஸ். உதயமூர்த்தி 1986, என பட்டியல் நீள்கிறது.. நீளும்.

கழக வரலாற்றில் மைல் கல்லாக இது வரை கிரேஸி மோகன் குழுவினர், ஒய்.ஜி.மகேந்திரன் குழுவினர், கத்ரி கோபால்நாத், மாண்டலின் சீனிவாசன், நெல்லை கண்ணன், இசையமைப்பாளர் சத்யா, பல் குரல் வித்தகன் தாமு, கஞ்சிரா கணேஷ், நீயா நானா கோபிநாத், தமிழ் சினிமாவின் புதிய நாயகன் சிவகார்த்திகேயன், விஜய் டிவி திவ்யதர்ஷினி,  டர்புகா சிவா இசைக் குழு, அசத்தப் போவது யாரு குழுவினர் (வடிவேல் பாலாஜி, ரோபோ ஷங்கர், சேது, டைனோசர் ராஜன்) ஆகியோரின் நிகழ்ச்சிகள் குறிப்பிடத்தக்கது. இந்த பட்டியல் இன்னும் வளரும்.

கழக உறுப்பினர்களின் வேண்டுகோளால்,கடந்த சில ஆண்டுகளாக தமிழ்த் திரைப்படங்களும் அவ்வப்போது தருவிக்கப்படுகின்றன

மேடை நிகழ்ச்சிகளுக்கும், உல்லாசச் சுற்றுலாக்களுக்கும் அப்பால் சமூகப்பொறுப்பிலும் கழகம் முத்திரை பதித்துள்ளது. தாய் நாடு உதவிக்கு தவித்த போது எம்.ஜி.ஆர்.வெள்ள நிவாரண நிதி, ஒரிஸ்ஸா புயல் நிவாரண நிதி, குஜராத் நில நடுக்க நிவாரண நிதி எனவும், புலம் பெயர்ந்த ஹாங்காங்கில் ஸார்ஸ் நிதி, சிச்சுவான் நிதி என திரட்டிக்கொடுத்து சமூகப்பணிகளும் செய்து வருகிறது

அனைத்து ஹாங்காங் தமிழர்களும் இதில் அங்கத்தினராவது அவசியம். தமிழ்ப் பண்பாட்டுக் கழகம் கலாச்சார வளர்ச்சிக்கும், சமூகப் பணிகளுக்காகவும் லாப நோக்கின்றி கழகம் தொடர்ந்து இயங்கி வரும் ஒரு லாப நோக்கமின்றி நடைபெறும் நிறுவனம்.

தமிழ்ப் பண்பாட்டுக் கழகம் உங்களின் அமைப்பு

உங்களது ஆதரவை நல்கி பெருமை சேர்க்கவும்.

நன்றி,

தலைவர்.

தமிழ்ப் பண்பாட்டுக் கழகம்

Sivaji Film release


NEEYA NAANA 08 JAN2011


Comments