To Learn - தமிழ் பயில..

ஹாங்காங் இளம் இந்திய நண்பர்கள் குழு, மாணவர்களுக்குத் தமிழ் வகுப்புகளை நடத்தி வருகிறது. செப்டம்பர் 2004-இல் துவங்கப்பட்ட இந்தத் 'தமிழ் வகுப்பு ', ஹாங்காங்கின் இடப் பிரச்சனைகளையும் பணி அழுத்தங்களையும் மீறி, ஒன்பது ஆண்டுகளாக தொடர்ந்து நடை பெற்று வருகின்றது. எல்லோரும் தலைதெறிக்க ஓடுகிற ஒரு நகரத்தில் YIFCஇன் அமைப்பாளர்களும், ஆசிரியர்களும் இந்த வகுப்புகளுக்காகச் செலவிடும் நேரமும் உழைப்பும் அபாரமானது.

இந்தத் தமிழ்க் கல்வித் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் டி.உபைதுல்லா. நிர்வாகப் பணிகளை அப்துல் அஜீஸ் கவனிக்கிறார். பண்டிதச் சாயல் சிறிதுமின்றி பாடஞ் சொல்லித் தருகிறார்கள் வகுப்பு ஆசிரியர்கள்.

இந்த வகுப்புகள் துவங்கப்பட்டதன் பின்னணி என்ன ?

'மொழி, கலாச்சாரத்தின் வேர். தாய் மொழி அறியாத சிறுவர்கள் சொந்த வீட்டிற்குள்ளேயே அந்நியர்களாய் வளர்கிறார்கள். இந்த ஆதங்கந்தான் இந்தத் திட்டத்தின் விதையாய் அமைந்தது ', என்கிறார் உபைதுல்லா. 'ஹாங்காங் தமிழ்ச் சமூகச் சிறுவர்களுக்குத் தமிழைப் படிக்கவும் பிழையின்றி எழுதவும் கற்பிப்பதுதான் இந்தத் திட்டத்தின் நோக்கம் ' என்கிறார் அஜீஸ்.

YIFC அமைப்பாளர்கள் யாரும் தமிழ்ப் பண்டிதர்களில்லை. ஆனால் தமிழ் மொழியின்பால் பற்றுடையவர்கள். இந்த வகுப்புகளின் ஆசிரியர்கள் யாரும் ஆசிரியப் பயிற்சி பெற்றவர்களில்லை. ஆனால் இளைய சமுதாயத்திற்கு கற்றுக் கொடுப்பதை விரும்பிச் செய்பவர்கள். இவர்களில் யாரும் மொழியியல் வல்லுநர்களில்லை. ஆனால் மொழிக் கல்விக்கு அவசியமான திறன்கள் என்று அந்த வல்லுநர்கள் சொல்லுவதை தங்கள் மாணவர்களுக்குப் பயிற்றுவிப்பவர்கள்.

கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வதுதான் ஒரு மொழியின் அடிப்படை நோக்கமாக இருக்க முடியும். ஆனால் அந்தப் பரிமாற்றம் முறையாக நிகழ வேண்டுமானால், அதில் பங்கேற்பவர்களுக்கு நான்கு அடிப்படை மொழித் திறன்கள் வேண்டும் என்கின்றனர் மொழியியலாளர்கள்.அவை கேட்டல், பேசுதல், படித்தல், எழுதுதல் என்பன. இந்தத் திறன்கள் மாணவர்களுக்குக் கைகூட வேண்டுமெனும் நோக்கோடுதான் பாடத்திட்டம் கவனமாக உருவாக்கப்பட்டிருக்கிறது. வகுப்புகள் அக்கறையோடு நடத்தப்படுகின்றன. உருப்போட்டு ஒப்பிக்கும் திறன்களையல்ல,உண்மையான மொழித்திறன்களையே இவர்கள் நடத்தும் தேர்வுகள் மதிப்பிடுகின்றன.

இத்தகைய தன்னலமற்ற சேவயைச் செய்து வரும் YIFC அமைப்பாளர்களூக்கு, தமிழ் பண்பாட்டுக் கழகம் தலை வணங்குகிறது. கழகத்தின் உறுப்பினர்களும் தங்களால் இயன்ற ஆதரவை நல்கி, தமிழ்ச் சமூகம் தழைக்க வழி கோருமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தொடர்புக்கு- Mr. Abdul Azeez,

Young Indian Friends Club, Post Box No.91221,

Hong Kong.

Tel: 852-8107 8585, Email: tamilkids@gmail.com

Website : www.yifc.org.hk